கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு 15 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10-ம் தேதி முதல் அமல்படுத்தியது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கில் நேரம் குறைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு அமைத்து போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக மாநகரின் மையப்பகுதியான தலைமை தபால் நிலையம் அருகே சிக்னலில் உள்ள பிரதான சாலைகளை போலீசார் பேரிக்கார்டுகள் கொண்டு சாலைகளை அடைந்துள்ளனர். இதனால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் இவ்வழியாக வரும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு அரசு தலைமை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கும் இவ்வழியாகத்தான் அழைத்து வருகின்றனர். இப்படி ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் சீக்கிரத்தில் மருத்துவமனைக்கு சென்றால் உயிர் பிழைத்து விடும் என்ற நம்பிக்கையில் வரும்பொழுது, போலீசார் சாலைகளை அடைத்துவைத்து வழிகளை மாற்றி விடுவதால், நோயாளிகளை ஏற்றிக்கொண்டு சாலைகளை சுற்றி வருவதன் மூலம் ஆம்புலன்ஸ்கள் அலைக்கழிக்கப்பட்டு பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது காவல்துறையினர் முறையாக சாலைகளை அடைத்து ஆம்புலன்ஸ் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு இலகுவாக சென்றுவர வழிகளை மாற்றி அமைக்குமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.