ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் முயற்சியாக நடந்து முடிந்த +2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ , மாணவிகளை அழைத்து “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும் நிகழ்ச்சி மாநில தலைவர் அப்துர் ரஜ்ஜாக். அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இதில் மாணவர்களின் சாதனையை பாராட்டி கேடயம் , சான்றிதழ் மற்றும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தவர்க்கு 20,000 ரூபாயும் , இரண்டாமிடம் பிடித்தவர்க்கு 10,000 ரூபாயும் , மூன்றாமிடம் பிடித்தவர்க்கு 5000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ – மாணவிகளுக்கும் கேடயம் , சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் பரவலான மாவட்டங்களிலிருந்து ஐம்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு விருதுகளை பெற்று சென்றனர் .இந்நிகழ்வில் தமிழகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் அவர்களது கல்வி சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மாணவர்களுக்கு தங்களது அனுபவத்தையும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் உணர்த்தினர்.
மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கம் மற்றும் அவசியம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் போத்தனூர் நசீர் அவர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் விளக்கினார். இறுதியாக அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் P.M. அல்தாஃபி அவர்கள் மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவின் மூலம் பிறருக்கும் , சமூகத்திற்கும் எப்படிப் பயனளிக்க வேண்டும் என்று சிந்தனை பூர்வமாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட நிர்வாகி ரபியுல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூறினார்.