திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 8-வது முறையாக மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று துவங்கியது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமியருக்கு தனி பிரிவாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனி பிரிவாகவும் மற்றும் பெண்களுக்கு தனி பிரிவாகவும் நடத்த திட்டமிட்டு இருந்தது.

 ஆனால் இன்று காலை 6 45 மணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கு பெறவும் காலை 7 மணிக்கு மேல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு பெரியவர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டியை அமைச்சர் கே என் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரக்கணக்கானோரை ஒன்றாக நிற்க வைத்து மாரத்தானில் பங்கேற்றனர்.

 அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மாரத்தான் போட்டியில் 18 வயது மேற்பட்டவர்களும் பெண்களும் சிறுவர் சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக மாரத்தான் போட்டியை நடத்தாமல் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரை ஒட்டுமொத்தமாக சாலையில் ஓடுமாறு வலிறுத்தினர்.

மாரத்தான் ஆன வாக்கத்தான்.

இதனால் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இதனை கண்டு கொள்ளாமல் திருச்சி காவேரி மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் கே நேருவிடம் கொடியை கொடுத்து போட்டியை துவக்கி வைக்க கூறினர். மாரத்தான் போட்டி துவங்கியதும் இதில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் பலர் கூட்டத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.

மாரத்தான் கூட்டத்தில் புகுந்து சென்ற வாகனங்கள்.. அச்சத்தில் ஓடிய மாணவர்கள்…

குறிப்பாக இது போன்ற மாரத்தான் போட்டிகளில் உடன் செல்லும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கையில் மருத்துவ முதலுதவி பாக்ஸ் வைத்திருப்பார்கள் அதேபோல் மாரத்தானில் பங்கேற்பவர்கள் மயக்கம் அடைந்தாலும் அல்லது காயம் அடைந்தாலும் உடனடியாக முதலுதவி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார்கள்.

மாரத்தான் கூட்டத்தில் சிக்கி காயம் அடைந்த சிறுமிகள்….

ஆனால் திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதலுதவிக்கான உபகரணங்கள் பாக்ஸ் எங்கும் காணப்படவில்லை என போட்டியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மாரத்தான் நிறைவு இடத்தில் ஒரு சில வழிகளை மட்டும் திறந்து வைத்து  உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அதேபோல் போட்டி நிறைவுபெறும் இடத்தில் கூடுதலான வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தும் ஒரு குறிப்பிட்ட ஓரிரு பாதைகளில் மட்டும் மாணவர்களை கூட்டமாக நிற்க வைத்து தண்ணீர் பாட்டில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் கூட்டத்தோடு கூட்டமாக மெடல் வழங்கப்பட்டது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர் வருத்தம் தெரிவித்தனர்.

மாரத்தானில் பங்கேற்ற அனைவரையும் கூட்டமாக நிற்க வைத்து அலட்சியமாக வழங்கப்பட்ட மெடல்கள்.

திருச்சியில் கடந்த பல வருடங்களாக திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி நடத்தி வருகிறது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமிகளுக்கென தனியாகவும் பெண்கள் ஆண்கள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வந்தது.

 ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர் பெண்கள் ஆண்கள் என அனைவரையும் ஒன்று கூட வரவைத்து அவர்களை மாரத்தானில் பங்கேற்க வைத்தது மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்ததாக போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் இதனை கண்ட பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்