திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்து பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ் என்கிற பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எந்த ஒரு சான்றிதழும், அனுமதியும் இன்றி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கழிவுகள் அரசு அமைத்துள்ள ஊர் பொது சாக்கடையில் கலப்பதாகவும், அதனால் அந்த கிராம மக்களுக்கு பல நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்த மெட்டல் நிறுவனத்தில் பாத்திரங்கள் தயாரிக்கும் சத்தம் அங்கிருந்து 250 அடியில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளின் படிப்பையும், கவனத்தையும் சீர் குழைப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் தகவல் அளித்ததன் பேரில், கடந்த வாரம் அதிகாரிகள் இதயா மெட்டல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். ஆனால் சரியான நடவடிக்கை இல்லை என்பது கிராம மக்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஊரின் நடுவில் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளிக்க கூடாது. இது குறித்து பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.