ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
மேலும் புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.