சமூக நீதிப் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தங்களது விவசாய விளைநிலங்களில் பயிரிட்ட பயிர்கள், வாழை மற்றும் பயிர் செய்திருந்த சோளம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக மனு அளிக்க வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூக நீதிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்துக்கு உட்பட்ட அதவத்தூர் கிராமத்தில் கடந்த 1946ஆம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு சுமார் 28.30 சென்ட் நிலத்தை அசைன்மென்ட் மூலமாக அப்போது வழங்கப்பட்டது. ஆனால் ராணுவ வீரர்கள் அந்த நிலத்தை உள்ளூர் விவசாயிகளுக்கு விற்பனை செய்து விட்டு சென்றனர். கடந்த 70 ஆண்டுகளாக அந்த இடத்தில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் திடீரென அந்தப் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி அந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆவணங்களை சரிபார்த்து விசாரணை செய்து வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு எங்களை அப்புறப்படுத்தாமல் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மேலும் அப்படி கையகப்படுத்த அரசு முனைந்தால் மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.