தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கான வருமானவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, வருமான வரி துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி பேசுகையில்:- நமது நாட்டின் வளர்ச்சியில் வருமான வரி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் எனவே வரியினை உரிய தவணையில் செலுத்து மாறு கேட்டுக் கொண்டார். மேலும் வரி செலுத்துவதின் முக்கியத்துவம், வரி கட்ட தவறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்து வரியை திரும்ப பெற(Refund claim) விழைவோர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபராதம் மற்றும் தண்டனை குறித்தும் அவ்வாறு தவறு செய்தால், வருமான வரி சட்டம் பிரிவு 270A ன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தைப் பொறுத்து சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் எனவே, இதுபோன்ற அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது உரிய கவனம் செலுத்துமாறும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் திருச்சி மாநகர தலைவர் கண்ணன், மற்றும் அதிகாரிகள் வள்ளியம்மை, ஜான் ரசல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வருமான வரி அதிகாரி ஜான் ரஸ்ஸல் நன்றி கூறினார்.