திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக மீனவர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீனவர் அணியினருக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் மற்றும் உபகரணங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வழங்கினர்.
இந்த நலத்திட்ட உதவி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஒரு குறிப்பிட்ட பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மீதம் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவில்லை. மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு நலத்திட்ட உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவில்லை என கூறி முறையிட்டனர்.
உடனே அமைச்சர் மீனவர் அணி பெண்களிடம் உங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்படும் என கூறிவிட்டு சென்றார் ஆனால் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த மீனவர் அணி பெண்களுக்கு எந்தவித உதவி பொருட்களோ, உபகரணங்களோ வழங்கப்படவில்லை மேலும் அங்கிருந்த தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மீனவர் அணி பெண்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த மீனவர் அணி பெண்களுக்கு உதவி பொருட்கள் ஏதும் வழங்கப்படாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர் .