தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே என் நேரு தொகுதிக்கு உட்பட்ட தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு இஸ்லாமிய கூட்டமைப்பு துணைத்தலைவர் உதுமான் அலி மற்றும் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் தலைவர் அக்பர் அலி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பு துணைத் தலைவர் உதுமான் அலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: –
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னூர் குத்பிஷா நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகளை பெயர்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது தற்போது வரை இப்பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் சீர் செய்யப்படாததால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக துயர சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்த உடலை எடுத்து செல்ல கூட முடியாதபடி சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் பிடித்து வரும் பெண்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த 28-வது வார்டு கவுன்சிலர் பையாஸ் அகமது ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வருகிற வெள்ளிக்கிழமைகுள்ளாக அன்று சாலைகள் மற்றும் தெருக்கள் சீர் செய்யப்படவில்லை என்றால் இப்பகுதி மக்கள் பள்ளிவாசல் இஸ்லாமியர்கள் ஆகியோரை திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.