தமிழர்களின் பாரம்பரியமான மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மற்றும் திருச்சி சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது. சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியதும், சில காளைகள் மாடுபிடி வீரர்களை அந்தரத்தில் பறக்க விட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்நாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஒரே மேடையில் நின்றபடி ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன் ஜல்லிக்கட்டு காளை வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து அங்கிருந்த மாடுபிடி வீரர்களை தெறிக்க விட்டு வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கை கொடுத்து பொங்கல் வாழ்த்துக்கள் கூறி வெற்றி பெற்ற சின்ன கொம்பன் காளைக்கான பரிசை வழங்கினார்.

இந்தச் சம்பவம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அதிமுக, திமுக மற்றும் பிற கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் எதிரும் புதிருமான திமுக மற்றும் அதிமுகவினர் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் மோதல்கள் ஆகியவை அரசியல் ரீதியாக இருந்தாலும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *