திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய இளைய மகள் சுவாதி. இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2015 ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 7 வயதில் விஷ்ணுகுமார் என்ற மகன் உள்ளார். கடந்த 5 வருடத்திற்கு முன்பு சுவாதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு தனது கணவரையும் பிள்ளையும் பிரிந்து வந்துள்ளார். பிறகு ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 ம் தேதி சுவாதி வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். எப்போதும் போல் வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து விடுவார் என குடும்பத்தினர் எண்ணி இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் சுவாதி வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர் ஆனால் சுவாதி கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை லால்குடி பேருந்து நிலையம் பகுதியில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சுவாதியை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்தியாயினி , உதவி ஆய்வாளர் பார்வதி, காவலர் சுஜாதா, கலைச்செல்வி, பரமேஸ்வரி, நந்தினி, சுசேந்திரன் ஆகியோர் அவரை மீட்டு விசாரணை செய்ததில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவருக்கு புது ஆடை வாங்கி கொடுத்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவருடைய பெற்றோருக்கு மகளிர் போலீசார் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று மகளை இனிமேல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறேன் என கூறி சுவாதி அழைத்து சென்றனர். மனநல பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளம் பெண்ணை மீட்டு புத்தாடை வாங்கி கொடுத்து, மேலும் மனநல பாதிக்கப்பட்ட சுவாதிக்கு மருத்துவ உதவிகளுக்கான ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மகளிர் போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.