தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63,000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய துறையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக பணியமர்த்திட வேண்டும், குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கிமீ தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையிலும், மன அழுத்தத்திலும் பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்களை சொந்தஊருக்கு இடமாற்றம் செய்திட வேண்டும், உடற்பகுதி தேர்வு மற்றும் எழுத்துதேர்வில் தேர்ச்சிபெற்று, மின்சாரவாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணியமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5493 பேங்க் மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் தமிழ்நாடு மின்சாரவாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய அளவில் அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று மாலை தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கேங்மேன் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கேங்மேன் தொழிலாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் அதிக அளவு கேங்மேன் தொழிலாளர்களே பணியமர்த்தப்படும் நிலையில் அவர்களுக்கான உதவித்தொகை எதுவும் அரசால் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், எனவே அரசு கேங்மேன் ஊழியர்களுக்கு மருத்துவகாப்பீடு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.