திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் சார்பில் ஆரிகாமி இதயங்களை அடுக்கி வைத்து உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி உலக சாதனை நிகழ்வு நடைபெறுவது குறித்து பள்ளியின் தலைவர் மாதவ மனோகரன், பள்ளி செயலர் ரஜினிகாந்த், பள்ளியின் முதல்வர் பாவை ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் 75ஆவது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் அங்கீகரிக்கும் உலக சாதனை ஒன்றைப் படைக்கவுள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக வருகின்ற 2023, ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிறன்று சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டினை முன்னிட்டும், பள்ளி துவங்கி 28ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மிக பிரம்மாண்டமான குழு உலக சாதனையைப் படைக்கவுள்ளோம். தமிழகத்திலேயே இது வரை யாருமே செய்திடாத வகையில் நமது இந்திய தேசியக் கொடியின் காவி, வெள்ளை, பச்சை மற்றும் நீல வண்ணங்களில் 1,60,000த்திற்கும் அதிகமான ஆரிகாமி காகித இதயங்களை செய்து, ஒட்டிவைத்து 337.50 சதுர மீட்டர் அளவிற்கு இந்திய தேசியக் கொடியை மிக பிரம்மாண்டமான அளவில் வடிவமைக்கவுள்ளோம். இந்த நிகழ்வு ஆரிகாமி இதயங்களை அடுக்கி வைத்து உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி (குழு) (The Largest National Flag Made with Origami Hearts by a Team) எனும் உலக சாதனையைப் படைக்கவுள்ளது.
இந்த உலக சாதனை தேசியக் கொடியின் நீளம் 22.5மீட்டர்கள். உயரம் 15மீட்டர்கள். விழா நிகழ்வுகள் அனைத்தும் பள்ளிக்கு அருகில் உள்ள வாசவி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1சனிக்கிழமையன்று 1.60,000 காகித இதயங்கள் செய்யப்படவுள்ளது. 2023, ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து காகித இதயங்களும் 7மணி நேரத்திற்க்குள் ஒட்டி மிகப் பிரம்மாண்டமான இந்திய தேசியக் கொடி உருவாக்கப் படவுள்ளது. இந்த நிகழ்வினை வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தலைவர் மாதவ மனோகரன் முன்னின்று நடத்துகின்றார்கள். பள்ளியின் முதல்வர் பாவை அவர்கள் கண்காணிப்பில் ஆசிரியர் பெருமக்கள் வழிநடத்தவுள்ளார்கள். இந்த உலக சாதனை திருச்சி மாவட்டத்திற்கும், தமிழத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும் என தெரிவித்தனர்.