தேசத்தின் மீது பற்று ஏற்படுத்தும் வகையிலும் பாரத பிரதமர் மோடி கூறியது போல் 75 ஆவது ஆண்டினை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதால் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு மற்றும் திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 28 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2,552 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக இணைந்து மிக பிரம்மாண்டமான குழு உலக சாதனையை படைத்துள்ளனர்.
தமிழகத்திலேயே இதுவரை யாரும் செய்திடாத வகையில் இந்திய தேசிய கொடியில் காவி வெள்ளை பச்சை மற்றும் நீல வண்ணங்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஆரிகாமி காகித இதயங்களை கொண்டு தேசியக்கொடியை உருவாக்கியுள்ளனர். இந்த தேசியக் கொடியானது 15 மீட்டர் உயரமும் 22.5 மீட்டர் நீளமும் பிரம்மாண்டமான 337.50 சதுர மீட்டர் அளவுள்ள படுகாவில் ஒட்டி மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை வடிவமைத்தனர்.
இந்த நிகழ்வு ஆரிகாமி இதயங்களை அடுக்கி வைத்து உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி எனும் உலக சாதனையை படைத்துள்ளது. காலை 8.30 மணிக்கு துவங்கிய இந்த உலக சாதனை நிகழ்ச்சி 11.45 மணி அளவில் முடிவடைந்தது. இந்த சாதனை நிகழ்வானது 3 மணி நேரம் 15 நிமிடங்களில் முடிக்கப்பட்டது.மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சிக்கு வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தலைவர் மாதவ மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் T.பாவை மேல்பார்வையில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.