கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்றும், காவிரி, கொள்ளிடத்தில் லாரி மூலமாக மணல் அள்ளி சென்று நிலத்தடி நீர் மட்டத்தை கீழே கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு மீண்டும் தங்கள் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து நடத்தினர்.
அப்போது அங்கு வந்த கலெக்டர் சிவராசு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.