இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராசன், மக்கள் அதிகாரத்தின் மாநில துணைச் செயலாளர் செழியன், சமூகநீதி பேரவை தலைவர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன், விவசாய கூலி தொழிலாளர் சங்கம் தங்கதுரை/இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
கடந்த 2020-2021ல் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேலும் காலதாமதப் படுத்தாமல் முறையான கணக்கெடுப்பு செய்து பாகுபாடு இன்றி விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பாண்டில் சம்பா சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பயிர் காப்பீட்டுக்கான தேதி நவம்பர்15 என்பதை கால நீட்டிப்பு செய்து டிசம்பர் 15 வரை நீடிக்க வேண்டும். தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கடந்த காலங்களில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குடியிருக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.அதற்கு உடனடியாக மாற்று வீடுகள் அல்லது பராமரிப்பு பணிகள் செய்து தர வேண்டும்.
தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.அந்த இழப்பீடு வழங்க கிராமங்கள் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக வழங்க வேண்டும். வருகின்ற 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் பேரணியில் திருச்சியில் இருந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் 500 பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறும் பேரணியை விளக்கி காந்தி மார்க்கெட்டில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.