குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சத்தான ஆவின் பாலை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சூழலில், போலியாக, செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி ஆவின் பால் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது. மேலும் பால் முகவர்களுக்கு, குறிப்பாக ஆளும் திமுகவைச் சேர்ந்த முகவர்களுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தட்டுப்பாடு இல்லாமல் உரிய நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் பால் நிறுவனங்கள் லாபம் அடைய வழி செய்ய கூடாது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக தலைமையிலான தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் கண்டித்து,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில், காலி பால் புட்டியுடன் கண்டன போராட்டம் நடைபெற்றது.பாலக்கரை பகுதி செயலாளர் சோலை ராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில், மாவட்டத் தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.