தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக திமுக மூத்த முன்னோடிகளுக்கு திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை மக்களுக்கு பயனுள்ள விதத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான். இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ளப் படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. தற்போது நாங்கள் அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.