ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த வெளி மாநில பக்தர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களுக்கு காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், கோவிலில் புனிதத்தை பாதுகாக்க தவறிய இந்து சமய அறநிலைத்துறை கோவிலை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சியினர் இன்று மாலை ரங்கா, ரங்கா கோபுரம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் பேசினர். பின்னர் கோவில் இணை ஆணையரை சந்திக்க கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து பேர் மட்டும் சென்று கோவில் இணை ஆணையரை சந்திக்க போலீசார் வலியுறுத்தினர். ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் அலுவலகம் முன்பாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக இணை ஆணையர் வரவேண்டும் என கோரி ரங்கா, ரங்கா கோபுரம் முன் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கோஷமிட்டப்படி ஊர்வலமாக வந்து ராஜகோபுரம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.