சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பாஜகவினர் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் அங்கு திரண்டனர். ஏற்கனவே பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது :- சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது. சனாதனத்தில் இருக்கும் 4 வர்ணங்களையும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி. ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்கிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. அதனை அளவீடு செய்வது யார்? புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்துள்ளது. திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும் இவ்வாறு அவர் கூறினார்.