திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்கிற விஜி வயது 50, தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்தார் இவருக்கும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக, கட்சித் தலைமைக்கு புகார் செய்யப்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விஜி நீக்கப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த விஜி, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் சமூக வலைதளங்கள் மூலமாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தி.மு.க., ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட மாரியப்பன் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம், நவல்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
கடந்த தேர்தலில், மீண்டும் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சராக பதவியேற்றார். இதனிடையே
விஜி தரப்பில், முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், இன்று, நவல்பட்டு போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விஜியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நவல்பட்டு விஜி உடல் நல குறைவு காரணமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.