இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு இராவணன் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் இலக்கிய தாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தார்.
மேலும் வெற்றி பெற்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1700 சிலம்பம் பயிற்சி பெற்ற வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன், நடிகர் கராத்தே ராஜா, நடிகை காயத்ரி ரேமா, நடிகை ஐஸ்வர்யா, திரைப்பட இயக்குனர் தினேஷ் கலைச் செல்வம், வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் கடந்த ஆண்டு 100 சிலம்ப வீரர் வீராங்கனைகளை கொண்டு 100 மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.