திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இலவசவீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, ராமச்சந்திராநகர்,செட்டியப்பட்டி, கே.கே.நகர், ராஜமாணிக்க பிள்ளைதெரு, ஓலையூர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்,
திருச்சி மேற்கு தொகுதி பஞ்சப்பூர் மற்றும் பிராட்டியூர் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அபிN~கபுரம் பகுதிசெயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், நிர்மலா, சேட்டு ஆகியோர் பேசினர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி மறுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்; போலீசார் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.