கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் “பம்பர்” பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த நீதிமன்றம் மற்றும் மத்திய அரசும் தடை விதித்தது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம், பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இது போன்ற தடை செய்யப்பட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடித்து பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுடிய திருச்சி லால்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் சௌந்தர பாண்டியன் தனது காரில் பம்பரை மாட்டிக் கொண்டு அரசு விழா, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். திருச்சி லால்குடியில் 4 முறை எம்எல்ஏவாக உள்ள சௌந்தரபாண்டியன் உயர் நீதிமன்றம் என்னை என்ன செய்து விட முடியும் என்று கேட்கும் ரீதியாக , தனது காரில் பம்பரை மாட்டிக்கொண்டு காரில் அமர்ந்து செல்லும் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு சல்யூட் அடிக்கும் போலீசாரின் கண்ணில் ஏனோ இந்த பம்பர் மட்டும் தெரியாமல் இருக்கிறது. சாமானியன் என்றால் பாயும் சட்டம், சட்டமன்ற உறுப்பினர் என்றால் தயங்கி நிற்பது ஏனோ? என பொதுமக்கள் கேட்கும் கேள்வி போலீசார் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை போலும்.