மனநல பாதிப்பு போன்று மனச்சிதைவு மிகப்பெரிய நோய் என்பதால் இந்நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 24ம் தேதி உலக மனச்சிதைவு நோய் கடைபிடிக்கப்படுகிறது. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினரால் மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவராக சாலையோரங்களில் சுற்றித்திரியும் அவலநிலை இன்றளவும் தொடர்கிறது.
15 வயது முதல் 70 வயது வரை அனைத்து வயதினருக்கும் பாலின பாகுபாடின்றி பாதிக்கப்படும் இந்த மனச்சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருச்சி ஆத்மா மனநல மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தில்லைநகரில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி தில்லைநகர் பிரதான சாலைகள், உறையூர்சாலை, சாஸ்திரி ரோடு வழியாகச்சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்தது.
ஆத்மா மனநல மைய, சமூக மனநல பணியாளர் கரண்லூயிஸ் முன்னிலையில், மனநல மருத்துவர்கள் ராஜாராம் மற்றும் ஸ்ரீதர் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம் அவர்கள் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக மனச்சிதைவு தீர்க்கமுடியாத நோயல்ல, மனநோயாளிகளுக்கு தேவை ஆதரவு தானே தவிர அனுதாபம் அல்ல என்ற மனநோய் குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.