திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுகவின் மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களையும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் அநாகரிகமான முறையில் பேசியும் பாட்டுப்பாடியும் கொலை மிரட்டல் விடுத்தும்
இதே போல் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக அவமானப்படுத்தும் விதமாகவும் அவரைப் பற்றி ஆபாசமும் அவதூராகவும் பேசி பாடல் பாடினர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கண்டு ரசித்து கைத்தட்டி சிரித்தனர். இந்த செயல் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் அனைத்து தலைவர்கள் மற்றும் தற்போதைய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடுகளானது தனிமனித சுதந்திரத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மற்றும் உண்மைக்கு மாறான தனிப்பட்ட முறையில் ஆபாசமாகவும் அவதூராகவும் அநாகரிகமாகவும் மற்றும் பெண்மை கேவலப்படுத்தும் விதமாகவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது அமைதிக்கு கலகம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் உள்ளது.
எனவே அவதூறு பரப்பி பாடல் பாடிய நபரையும் அதனை கேட்டு ரசித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் துர்கா தேவி, சுகுணா முத்துராஜ், பூர்ணிமா, மற்றும் நிர்வாகிகள் சித்ரா ஜெயலக்ஷ்மி ராஜேஸ்வரி சரண்யா உள்ளிட்ட மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.