திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் விமானத்தில் குருவிகளாக வருபவர்கள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் மறைத்து எடுத்து வந்த சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், திருச்சி விமான நிலைய முனைய பகுதியில் வருகை பகுதியில் உள்ள கழிவறையில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவறை பகுதியில் கேட்பாரற்று ஒரு கைப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பையினை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 1.5 கிலோ என்றும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 1.05 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலைய சிசிடிவி காட்சிகளை கண்காணித்தபோது இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது