மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர் முகமதுபர்தீன் தலைமையிலான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றனர். தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களில் யோகேஸ்வரன் மற்றும் முகமதுசபீர் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரராக பிரணவ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஐவர் கால்பந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடி 2-வது இடம் பிடித்தார். அவருக்கு திருச்சி மொராய் சிட்டியில் உள்ள பிவிஎம் குளோபல் பள்ளியின் சார்பாக பள்ளி முதல்வர் கலைவாணி பொன்னாடை போற்றி உற்சாக வரவேற்பு அளித்தார். மேலும் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் பாஸ்கரன், சுபாஷினி ஆகியோர் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐவர் கால்பந்து விிளையாட்டு போட்டி வீரர் பிரணவ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
ஐவர் கால்பந்து போட்டியில் முதன்முறையாக தமிழகத்திலிருந்து சென்ற எங்கள் அணி மூன்றாவது இடம் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். மேலும் இதில் சிறப்பாக விளையாடிய தற்காக என்னை இந்திய அணியில் பங்கேற்று விளையாட வைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இந்திய அணிக்காக ஐவர் கால்பந்து இந்திய அணியில் விளையாடுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் எனது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு இந்த ஐவர் கால்பந்து போட்டிக்கு உற்சாகமும் நிதி உதவியும் வழங்கி இந்த விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூடிய விரைவில் கோவா மற்றும் பாங்காங்கில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளேன். மேலும் இந்த ஐவர் கால்பந்து போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்தார்.