திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி ( AITUC) துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேலையை, ஊதியத்தை வாழ்க்கையை பறிக்கும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். அரசாணை எண் 152 (20.10.2022), 10 ( 23.01.2023), 139 ( 3.10.2022) உள்ளிட்ட வெளிச்சந்தை முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினகூலி, சுய உதவி குழு போன்ற பெயர்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் கணிசமான தொழிலாளருக்கு வேலை இழப்பு ஏற்படுத்தும் நகராட்சி விதிகளை திரும்ப பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ரூபாய் ( 5000) காலதாமதம் இன்றி வழங்கிடுக. 3 ஆண்டு பணி முடித்த அனைத்து தூய்மை பணியாளர்களையும் நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும். அவுட்சோசிர்சிங் முறையை முற்றிலுமாக கைவிட்டு நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்திடு குப்பை எடை போட்டு வாங்கும் முறையை கைவிட வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த AITUC திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் பேசியது..
தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளில் பல்வேறு பணிகளை தனியார் மயமாக்கி வருகிறார்கள் இதனால் பல குடும்பங்கள், வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாநில அரசு இதை தலையிட்டு தூய்மை பணியாளருக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் மற்றும் பணி நிரந்தரத்தையும் உறுதி செய்திட வேண்டும். மேலும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தூய்மை பணியாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.