திருச்சி வருமான வரித்துறை சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருமானவரித் துறை திருச்சி, இணை ஆணையா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி. வசந்தன் பேசியது : நாடு முழுவதும் சுமாா் 61 கோடி பேருக்கு பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2023-24 -ஆவது நிதியாண்டில் 8.18 கோடி போ் மட்டுமே வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்துள்ளனா். அதில் திருச்சி மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் சரகத்தில் 10 சதவீதம் போ் மட்டுமே இந்த படிவத்தை தாக்கல் செய்துள்ளனா்.
நாடு முழுவதும் தாக்கல் செய்யப்படும் வருமான வரி படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீத படிவங்கள் மக்கள் மீதான நம்பிக்கை காரணமாக மதிப்பீடு செய்யப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, அதற்கேற்ப பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து வருமான வரியை செலுத்த வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஜான் ரசல், வள்ளியம்மை, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளா் கோவிந்தராஜுலு, தொழில் அதிபா்கள் மங்கள் அண்ட் மங்கள் மூக்கப்பிள்ளை, லயன் டேட்ஸ் பொன்னுத்துரை, ஷில்பா ரங்கராஜன் மற்றும் திருச்சி கரூா், அரியலூா், பெரம்பலூா் பகுதியை சோ்ந்த வரி செலுத்துவோா், வணிகா்கள், பட்டைய கணக்காளா்கள், வரி ஆலோசகா்கள் கலந்து கொண்டனா். துணை ஆணையா் கே. கருப்பசாமி பாண்டியன் வரவேற்றாா்.