திருச்சி கொட்டப்பட்டு பகுதியிலே தனியார் (பாவை) அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும் தான் இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம். நான் மட்டுமல்ல என்னை போல் பலர் அரசு வேலைக்கு செல்வதால் சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை கிடைக்கிறது. வாழ்க்கையின் முதல் பாதியில் யார் கஷ்டப்பட்டு படிக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கும். நானும் என் வாழ்க்கையின் முதல் பாதியில் கஷ்டப்பட்டு படித்தேன் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.
கல்வி ஒன்று தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பணம் இருந்தால் ஒருவருக்கு பலம் கிடைக்கும். பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க கூடாது நன்றாக படித்து பணம் சம்பாதிக்க வேண்டும். அதே போல நல்ல நண்பர்களையும் உருவாக்கி கொள்ள வேண்டும். சகதியில் மாட்டிக்கொண்டால் போராடி வர கூடாது மூளையை பயன்படுத்தி வெளியே வர வேண்டும். அதே போல தான் வாழ்க்கையில் உழைப்பு மற்றும் கல்வியை பயன்படுத்தி நாம் மேலே வர வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருண் குமார் : மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தால் மற்ற விஷயங்களுக்கு செல்ல மாட்டார்கள் அதில் சுணக்கமாக இருந்தால் தான் போதை உள்ளிட்ட மற்ற பழக்கங்களுக்கு தேடி செல்வார்கள். தமிழ்நாட்டில் போதை பொருட்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் முதலமைச்சர் நேரடியாக இது குறித்து ஆய்வு செய்து வருகிறார் என்றார். இந்த இல்லத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் தான் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை மேலாளர் முரளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.