திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை திருவரம்பூர் பகுதியை சுற்றியுள்ள பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஜி கே மூப்பனார் நகர் நல சங்க தலைவர் தொப்பி செல்லதுரை தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் படங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்து. கையில் பூட்டு சங்கிலி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களால் பரபரப்பு.
திருச்சி திருவரம்பூர் பகுதியை சுற்றியுள்ள வாழவந்தான் கோட்டை, துவாக்குடி, நேதாஜி நகர், மலைக்கோவில், குங்கும புரம், சூரியூர், நவல்பட்டு, போலீஸ் காலனி, சோழ மாநகர், டாக்டர் அம்பேத்கர் நகர், வேங்கூர், மூப்பனார் நகர், கூத்தப்பர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழில் செய்து வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை எளிய 500 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்
கடந்தமாதம் இப்பகுதியை சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையின் படி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா கிடைக்காத காரணத்தால் இன்று காலை திருவரம்பூர் பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டும், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டும் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி அவர்களின் படத்திற்கு முன் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். மேலும் திருவரம்பூர் மூப்பனார் நகர் பகுதியில் ஆதிதிராவிடர்களுக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போடுவதாக அறிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கிலியுடன் பிணைக்கப்பட்ட பூட்டினை கையில் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.