இன்று உலகம் முழுவதிலும் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும், இதுவரை ஆண்டுக்கு 4 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு முதல் 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன் ஊராட்சி செயலர் கண்ணன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமங்களில் உள்ள கால்வாய், ஏரி, குளம், குட்டைகளில் மழை நீரை சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் .கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது இதே போல் சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய கிராம சபை கூட்டம் தலைவர் குணவதி துரை பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா துணைத் தலைவர் வீரலட்சுமி ரவி மற்றும் சோமரசம் பேட்டை பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.