‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் பனையகுறிச்சியில் ஏராளமான விவசாயப் பெருமக்கள், ’நடந்தாய் வாழி காவிரி நாயகனே’ என்ற பதாகையைப் பிடித்தபடி காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கினார் இபிஎஸ். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ் மற்றும் பலரும் உடனிருந்தனர். விவசாயிகள் ஆழாக்கில் அரிசி மற்றும் பூக்களை நிரப்பி இபிஎஸ் கையில் கொடுத்து, “அய்யா உங்களது பொன்னான கைகளால் அரிசியையும், பூக்களையும் காவிரி ஆற்றில் தூவுங்கள், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். உடனே இபிஎஸ் மகிழ்ச்சியுடன் அரிசியையும், பூக்களையும் காவிரி ஆற்றில் தூவினார். இதையடுத்து இபிஎஸ்ஸிடம் பேசிய விவசாயிகள், ‘’காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில், ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைக் கொண்டுவந்தீர்கள்.

மத்திய அரசிடம் பேசி இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னெடுப்பு செய்தீர்கள். இந்த திட்டம் நிறைவேறினால் சாயக்கழிவு, கழிவுநீர் போன்றவை ஆற்றில் கலந்து நீர் மாசுபடுவது முழுமையாகத் தடுக்கப்படும். இதன் மூலம் நீர் ஆதாரமும் மேம்படும். மத்திய அரசுடன் இணைந்து நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொடுத்த உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தனர். அதோடு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டி நீர் சேமிக்கவும் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேசிய இபிஎஸ், “ஏற்கனவே ஆதனூர் குமாரமங்கலம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டியிருக்கிறோம். மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு திட்டத்தை ரத்து செய்துவிட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், தடுப்பணை கட்டும்போது அந்த இடத்தைச் சுற்றிய நிலங்களும், மக்களும் பாதிக்கப்படக்கூடாது, அதுபோன்ற இடங்களை ஆய்வு செய்தே அமைக்க முடியும். அதனால் முழுமையாக ஆராய்ந்து தடுப்பணை அமைத்துக்கொடுக்கிறேன்” என்றார். பஸ்ஸில் ஏறிய இபிஎஸ் அந்த விவசாயிகளிடம், ’எப்போது நடவு, என்ன ரகம்?’ என்று கரிசனத்துடன் விசாரித்தார். அதற்கு விவசாயிகள், “அய்யா, புரட்டாசி மாதத்தில் நடவு செய்வோம், ஆந்திரா பொன்னி ரகம் நெல்லு, நடவு செஞ்சதில் இருந்து விளைச்சல் கிடைக்க 135 நாளாகும்…” என்று கூறி விடை கொடுத்து அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *