தஞ்சை ,திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் சுமார் 90 சதவீதம் காவிரி நீரை நம்பியே பயிரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக குறைந்துள்ளது.6400 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் 8000 நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தாலும் திறந்து விடப்படும் நீரின் அளவு மிகக்குறைவாக இருப்பதாலும் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. எனவே காவிரி ஆற்றில் உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும், மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 43 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அய்யாக்கண்ணு 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் திருச்சி முத்தரசநல்லூர் காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மாலைகட்ட பயன்படுத்தப்படும் மாசிபச்சை பயிரினை காவிரி ஆற்றுக்குள் நட்டு வைத்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஜீயபுரம் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்பு துறையினர் ஆற்றில் இருந்து ரப்பர் படகு மூலம் வெளியே அழைத்து வந்தனர்.