திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் நவீன கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி (ஆர்பிட்டல் அதெரெக்டமி) சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது குறித்து காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் இதய நோய் சிகிச்சை, எலக்ட்ரோ பிஸியோலாஜிஸ்ட் ஜோசப் ஆகியோர் கூறியது:-
இதயம் சார்ந்த ரத்த நாளங்களில் இறுகி கடினமாகியிருக்கின்ற கால்சியம் படிமங்களை உடைத்து துளாக்கி அகற்றுவதற்கும், ரத்தநாளங்களில் உள்ள அடைப்புகளை ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் ஸ்டன்ட் பொருத்தும் சிகிச்சை செய்வதற்கு ஆர்பிட்டல் அதெரெக்டாமி நவீன முறை கையாளப்படுகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக இதுபோன்ற சிகிச்சை காவேரி ஹார்ட்சிட்டியில் மேற்கொள்ளப்பட்டது.
ரத்தநாளத்தில் உள்ள கால்சியம் படிமங்களை அகற்றுவதற்கு 1.25மி.மீ அளவுள்ள வைரத்தால் செய்யப்பட்ட கிரவுனை பயன்படுத்தி படிமங்களை உடைத்து அதனை ரத்தத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது. கரோனரி ஆர்பிட்டல் அதெரெக்டாமி சாதனத்தில் பம்ப், அட்வான்சர்,வயர் மற்றும் லுாப்ரிகன்ட் போன்றவைகள் உள்ளன. இந்த வைரப்பூச்சு கொண்ட கிரவுன் ஒரு வயரின் மூலம் ரத்தநாளங்கள் வழியே உள் செலுத்தப்படுகிறது. சிறுநீரக பாதிப்புள்ள 69 வயதான நோயாளிக்கு கடுமையான கால்சியம் படிம கரோனரி தமனி நோயும் கண்டறியப்பட்ட நிலையில் இந்த ஆர்பிட்டல் அதெரெக்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது முழு குணம் அடைந்த நோயாளி தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருப்பதால் காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் பல சவால்களான நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர். நிகழ்ச்சியில் பொது மேலாளர் (வர்த்தகம்) மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவ நிர்வாகி சாந்தி வரவேற்றார். பொது மேலாளர் (இயக்கம்) ஆன்ட்ரோஸ் நித்தியதாஸ் நன்றி கூறினார்.