கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு திருநாள் பவனி நடைபெற்றது.
ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர் சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளைக் கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குருத் தோலை பவானி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் மூலம் புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
அதனைத் தொடர்ந்து இந்த புனித வாரத்தில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அன்று வியாழக்கிழமை புனித வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்தினார். தன்னிடம் இருந்த 12 சீடர்களின் பாதங்களையும் இயேசு கிறிஸ்து கழுவியதை நினைவு கூறும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலின் போது பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களைக் கழுவுவார்கள்.
அன்றைய திருப்பலி நிறைவு பெறும்போது திவ்ய நற்கருணை பவானியாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்கப்படும். மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று முழு நாளும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஏந்தி பவனியாக மக்கள் வந்தனர்.