தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் திவ்யா குப்தா, திருச்சியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசம் உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். அதற்காக, குழந்தைகள் மற்றும் அந்த துறையினர் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். திருச்சி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. திருச்சியில், கொரோனா பாதிப்பால், 45 இறப்புகள் நிகழ்ந்தன என்பதைத் தவிர, அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை, இழப்பீடு பெறவில்லை. உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும்.
பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில், 770 பேரிடம் குழந்தைகள் பிரச்னை தொடர்பாக, மனு பெறப்பட்டது. அதில், 97 சதவீதம் குழந்தைகள் ஒற்றை பெற்றோருக்கு சொந்தமான மிக மோசமான சூழ்நிலையில் உள்ளனர். அதாவது, தந்தை கொரோனா பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு நோய் அல்லது தற்கொலை போன்ற காரணங்களால் இறந்து விட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் உள்ளனர். சிலர், பெற்றோர் இல்லாததால், தாத்தா, பாட்டியுடன் வசிக்கின்றனர். இது மிகவும் சோகமான, ஆபத்தான நிலை. ஒற்றை பெற்றோர், பிள்ளைகளால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நோய்களால், இவ்வளவு இறப்புகள் ஏற்பட்டது பற்றி சுகாதாரத் துறையினரிடம் கேட்டதில், சரியான விளக்கம் பெற முடியவில்லை.
இருப்பினும், இப்போதுள்ள தரவுகளை முழுமையாக மதிப்பீடு செய்து, தேவையான நடவடிக்கை எடுத்து, இந்த நிலையை மாற்ற வேண்டும், என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளேன். இது ஒரு பின்னோக்கிய ஆய்வாக இருக்கும் என்பதால், கால அவகாசம் தேவைப்படும். அதனால், 15 நாட்களுக்கு பின், என்ன நடந்தது என்பதைக் கண்டறிய மீண்டும் வருவேன். மாநில அரசு, இதை ஒரு விழிப்புணர்வு அழைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.