கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருவோர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவுப்படி கேரளாவில் இருந்து ரயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிக்க கொரோனா பரிசோதனை முகாம் ஜங்ஷனில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா சான்றிதழ் வைத்துள்ளனரா என சோதனை செய்தனர். சான்றிதழ் இல்லாதவர்களுக்கு ஜங்ஷன் வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட பின்னரே வௌியேற அனுமதிக்கப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பாலக்காட்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்த பயணிகளை சுகாதார இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.