நீண்ட மாதங்களாக மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவி தொகையை உடனே விடுவிக்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3000 ஆகவும், மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 5000 ஆகவும் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005 ன்படி 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வேண்டும்,
கோர்ட் வளாகத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செல்லும் சாலையை காலதாமதமின்றி செப்பனிட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கக்கூடிய வங்கி கடன்கள் அனைத்தையுமே கால தாமதமின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத் தலைவர் முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐய்யாகண்ணு தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட துணை தலைவர் அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில தலைவர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.