தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மண்ணச்சநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீட்டர்மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மணப்பாறை கல்வி மாவட்ட தலைவர் தாமோதரன், வட்டசெயலாளர் ரூபன்வினோத்குமார் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றுப்பணி என்று ஆணை வழங்கி உள்ளது சட்டத்திற்கு மாறாக உள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத நிலையில் ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவது கண்டனத்திற்கு உரியதாகும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியருக்கு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாற்றுப்பணி ஆணை வழங்குவது எந்த சட்டத்திலும் இடமில்லை. முதன்மை கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவு என்று லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஆணை வழங்கி உள்ளார். ஆரம்பப்பள்ளிகளில் பல இடங்களில் ஆசிரியர் தேவை இருக்கும் போது மேல்நிலைப்பள்ளி மாற்றுப்பணி வழங்குவது விதிகளுக்கு மாறாக உள்ளது. எனவே தற்போது வழங்கப்படும் மாற்றுப்பணி ஆணையினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் தனிச்சங்க நடவடிக்கையாகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பு கூட்டு நடவடிக்கையாகவும் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வட்டார தலைவர் நிர்மலா வரவேற்றார். முடிவில் லால்குடி கல்வி மாவட்ட தலைவர் சாந்தி நன்றி கூறினார்.