சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் முக்காடு அணிந்து அதனை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுதி செயலாளர்கள் தர்மா, விஜயேந்திரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் சார்லஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ், சங்கநிர்வாகிகள் ராகிலா , நவநீதகிருஷ்ணன், ஹாஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.