கொரோனாவின் 2-ம் அலையை தொடர்ந்து தற்போது 3-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டும், ஒருசில நாடுகளில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புடன் பயணம் வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று விடியற்காலை துபாய் செல்வதற்காக விமான பயணிகள் 150க்கும் மேற்பட்டோர் விமான நிலையம் வந்தனர்.
விமான பயணிகள் இன்று காலை 9:15 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானம் வரவில்லை. மேலும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படவில்லை இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் விவரம் கேட்டதற்கு, துபாய் நாட்டிற்கு செல்லும் விமான பயணிகளுக்கு நமது விமான நிலையத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை அறிக்கையை துபாய் நாட்டு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் திருச்சி விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமான பயணிகள் காக்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இது குறித்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் கேட்ட போது உரிய பதில் கிடைக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா வரை விமானம் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக விமான பயணிகள் துபாய்க்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.