காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை சங்கம் அமைத்து தீர்வுகாண முயன்றநிலையில், சாம்சங் நிர்வாகம் மறுத்துள்ளதுடன், சாம்சங் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு பின்னால் திமுக அரசும், தொழிலாளர் நலத்துறையும், காவல்துறையும் கைகோர்த்து செயல்பட்டுவருகிறது என் கூறியும் குறைந்தபட்ச ஊதியம், உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும், 23 ஆவது நாளாக தொடர்ந்து போராடும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களை மிரட்டும் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து திருச்சியில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சத்திரம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தொழிலாளர்களை வதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் சத்திரம் பேருந்துநிலையத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம் அமைக்கவும், சிஐடியு தொழிற்சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வெளிநாட்டுக்குச் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்ததாக கூறும் திமுக அரசு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தைபெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.