இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் இன்றைய தினம் தொடங்கி 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது. மேலும் வருகிற ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
குறிப்பாக இயேசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
அதன்படி திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் தவக்காலத்தில் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி மறை மாவட்ட அதிபர் அருட்பணி சகாய ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு திருப்பலி ஆலயத்தில் இன்று நடைபெற்றது. திருப்பலியை தொடர்ந்து பங்கு மக்களுக்கு அருட்பணி சகாய ஜெயக்குமார் உதவி பங்குத் தந்தை அருட்பணி சகாயராஜ் மற்றும் அருட்பணி சகோதரிகள் பங்கு மக்களின் நெற்றியில் திருநீற்று வைத்து ஆசீர்வதித்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு இறை அருள் ஆசி பெற்று சென்றனர். மேலும் இந்த ஆண்டிற்கான தவக்காலம் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி, இறுதியில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.