திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (பிரீஷ்) நட்சத்திர ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் … தேவேந்திர குல மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை தடுக்க வலியுறுத்தி, திருச்சியில் பேரணி நடந்த அனுமதி கேட்டோம். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினர், மற்றொரு அரசியல் அமைப்புக்கு பேரணி நடத்த மட்டும் அனுமதி கொடுத்துள்ளனர் என்பதை இன்றைய செய்திதாள்களில் படித்து தெரிந்துக்கொண்டேன். பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுப்பதில் காவல் துறையினரின் செயல்பாடு ஒருதலை பட்சமாக இருக்கிறது. பேரணி நடத்த மற்றவர்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. மேலிருந்து கொடுக்கிற அழுத்தத்தின் காரணமாக தாங்கள் விரும்புகிற ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதிப்பதும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதும் கூடாது என்கிறோம். இதற்கு மாறாக ஒருதலைச் பட்சமாக பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டால், அதன் பிறகு நாங்களும் திருச்சியில் பேரணி நடத்துவோம். இட ஒதுக்கீட்டில் 18 விழுக்காடு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் உள் ஒதுக்கீடு என்ற அடிப்படையில், மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு அருந்ததியர் இன மக்களுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 15 விழுக்காட்டிலும் அவர்கள் அரசு பணியை பெறுகின்றனர். பட்டியல் இனத்தில் 76 சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இதில் அருந்ததியர் இன மக்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பயனை அடைகிறார்கள். உள் ஒதுக்கீடு என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, பட்டியல் இனத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து வழங்க வேண்டும். அரசு எந்தவித ஆய்வும் செய்யாமல், முழுமையான தகவல்களை பெறாமல், அரைகுறையாக உள் ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும்.நாங்கள் அருந்ததியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்று சொல்லவில்லை.

அரசு பணியில் எத்தனை இடங்களில் அவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களுடைய பொருளாதார நிலை என்ன என்பதையும், பொதுப்படையாக தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். அதனை செய்யாமல் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவது அயோக்கியத்தனமானது. உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் ஜூன் 18ஆம் தேதிக்கு பிறகு தமிழக முழுவதும் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம். அது எத்தகைய போராட்டம் என்பதை பின்னர் அறிவிப்போம். அறண்டவன் கண்களுக்கு, இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, தேசிய கல்விக் கொள்கையை கண்டு தமிழக அரசு அஞ்சுகிறது. தேசிய கல்விக் கொள்கையில், என்.சி.இ.ஆர்.டி., சி.பி.எஸ்.சி பாடத்திட்டங்கள்,உலக அளவில் இருக்கக்கூடிய கல்வி திட்டத்திற்கு நிகரானது. தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம் மனப்பாடக் கல்வியை ஊக்குவிப்பதாக மட்டுமே உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் உள்ள பாடத்திட்டம், மாணவர்களின் பன்முகத் திறனை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. அதனை மதயானை என்று தமிழக அரசு சொல்வது ஏற்புடையது அல்ல. ஒரு நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையிலான பெரிய புராணம் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் மத நம்பிக்கை சார்ந்து, பிள்ளைக்கறி சமைத்து வேண்டுதல் நிறைவேற்றிய கதைகளும் உள்ளன.

இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிலும், கிறிஸ்தவர்கள் வாழும் நாட்டிலும் கூட, மதம் நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள், அந்தந்த நாடுகளின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் திமுகவினர் இரட்டை வேடம் போடுவதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக முழுவதும் டாஸ்மாக் மது விற்பனையை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். மது விற்பனையால் அரசுக்கும், தமிழக முதல்வரின் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அதேசமயம் மது விற்பனையால் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் குடி நோயாளிகளாக மாறி உள்ளனர். தொடர்ந்து உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகிறது. புற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் இதனால் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக திமுகவினருக்கு எதிராக வழக்குத் தொடர தமிழக ஆளுநரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். அவர் இன்னும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆளுநர் திமுகவினருக்கு உடனடியாக செயல்படுகிறார் என்று சொல்ல முடியாது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் ஆளுங்கட்சியா? ஆண்ட கட்சியா? அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது இல்லாத தமிழ்நாடு வேண்டும். மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கள்ளுண்ணாமைக்கு 10 திருக்குறள் தந்த வள்ளுவரையும், அந்த இலக்கியத்தை போற்றும் தமிழக அரசு மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மக்கள் விரோத திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அது உடனடியாக சாத்தியப் படாவிட்டால் வரும் 2026 ஆம் ஆண்டு திமுக அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து, வரும் தேர்தலில் திமுக வை தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைய அதற்கு உண்டான முயற்சியை நாங்கள் முன்னெடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *