இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- சிறுபான்மையினா் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் திருச்சி மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ கடனுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது ஆனவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாக இருந்தால் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இந்தக் கடனுதவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெறலாம். முழுமையான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கடன் தொகை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். வங்கி மூலம் விண்ணப்பதாரருக்கு கடன் அளிக்கப்பட்டதும் எந்தத் தொழில் செய்யக் கடன் பெற்றாா்களோ அந்தத் தொழிலை செய்ய மட்டுமே பணத்தை பயன்படுத்த வேண்டும்.தவறான தகவல் அளித்து கடன் பெற்றது தெரியவந்தால், கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு தொகை மொத்தமாக வசூலிக்கப்படுவதோடு எதிா்காலத்தில் எந்தக் கடன் தொகையும் கோரி விண்ணப்பிக்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் இந்தக் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சாதிச் சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும். தனிநபா் கடனாக அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். கைவினைக் கலைஞா்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுய உதவிக் குழு கடனாக நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயன்பெற ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *