அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சி கலெக்டர் சாலையில் உள்ள கோர்ட்யார்ட் ஹோட்டலுக்கு இன்று வந்தார்.
மேலும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹோட்டலில் தங்கி இருந்த டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பிறகு ஹோட்டலில் இருந்து டிடிவி தினகரன் கார் மூலம் புறப்பட்டு சென்றார் அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் நிர்வாகிகள் சாலையில் வெடி வெடித்தனர்.
இதனைக் கண்ட திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் கென்னடி மாவட்ட செயலாளர் செந்தில் நாதனிடம் சாலையில் வெடி வைக்க அனுமதியில்லை என கூறி வெடி வைக்க முயன்ற நிர்வாகிகளிடம் இருந்து வெடிகளை அப்புறப்படுத்த கூறினார். மேலும் தங்களின் வாகனங்களை கலெக்டர் சாலை முழுவதும் நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த சாலையில் நோயாளியை ஏற்றுக்கொண்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் போக்குவரத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர்.
எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இது போன்ற சமயங்களில் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட சம்பவங்கள் நிறைய தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசலில் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் சிக்கி தவித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.