விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி காவிரி பாலத்தில் இன்று மதியம் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தும், முட்களையும், செடிகளையும் தண்டவாளத்தில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் இரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகளை ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு தண்டவாளத்தில் பேரணியாக நடந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.