திருச்சி பெரியகடை வீதி, ராணி தெரு பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன் வீட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்
அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் 9 கைபேசியும் மற்றும் ரூபாய் 6,57,320/- (ஆறு இலட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரத்தி முன்னூற்றி இருபது) ரொக்கம் மற்றும் கடைகாரர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக 227 கிராம் வெள்ளி நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி மற்றும் கோட்டை ஆய்வாளர் தயாளன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களில் வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.